
காஞ்சிபுரம்
இலங்கையில் இருந்து சென்னைக்கு ஒரு கிலோ 100 கிராம எடை கொண்ட ரூ. 33 இலசம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்திவந்த ஆந்திர இளைஞர் சுங்க இலாகா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்திக் கொண்டுவரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து அதிகாலை கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தும், சந்தேகப்படுவோர் மீது சோதனையையும் மேற்கொண்டனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த காஜாசபீர் (35) என்பவர் சந்தேகப்படும் படி நடந்துகொண்டதால் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் எதுவும் இல்லை என்று தெரிந்தது.
ஆனால், அவர் கொண்டுவந்த ‘பிளாஸ்க்” வழக்கமான எடையை விட சற்று அதிகமாக இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் அதனைக் கழற்றி சோதித்தனர். அப்போது அந்த அதில் சூடு குறையாமல் இருப்பதற்காக வைக்கப்படும் தெர்மாகோலுக்கு பதிலாக, தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுப்பிடித்தனர்.
அதிலிருந்த ரூ.33 இலட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட 11 தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக காஜாசபீரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.