பத்து ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை- புனலூர் இரயில் சேவை இன்று தொடக்கம்; பயணிகள் பெரும் மகிழ்ச்சி...

First Published Mar 30, 2018, 8:36 AM IST
Highlights
Ten years after sengottai - Punalur rail service from today Passengers are very happy ...


திருநெல்வேலி
 
பத்து ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை- புனலூர் இடையே இன்று இரயில் சேவை தொடங்கப்படுவதால் பயணிகள்  பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை - புனலூர் மீட்டர் கேஜ் இரயில் பாதை அகற்றப்பட்டு தற்போது புதிதாக அகல இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இரயில் பாதையில் அதிவேக இரயில் இயக்கி சோதனை நடத்திய பிறகு, இரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்தப் பாதையில் ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரையிலும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து எடமண் வரையிலும் பாசஞ்சர் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், முழுமையாக இரயில் இயக்கப்படவில்லை. 

இந்தப் பாதையில் நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்துக்கும், மதுரையில் இருந்து கொல்லத்துக்கும் பாசஞ்சர் இரயில்கள் இயக்கப்படும் என்று இரண்டு மாநில பயணிகளும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தென்னக இரயில்வே சார்பில் சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு கட்டண இரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இரயில் சேவை தொடங்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து இரயில் வண்டி எண் 06027 புறப்படுகிறது. இந்த இரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களை கடந்து, மறுநாள் அதிகாலை 4.28 மணிக்கு சங்கரன்கோவில் இரயில் நிலையத்துக்கு வருகிறது. 

தொடர்ந்து 4.55 மணிக்கு கடையநல்லூர், 5.13 மணிக்கு தென்காசி, 5.50 மணிக்கு செங்கோட்டை, 6.13 மணிக்கு பகவதிபுரம், 7.13 மணிக்கு தென்மலை, 7.48 மணிக்கு எடமண், 8.30 மணிக்கு புனலூர், 8.48 மணிக்கு அவனீசுவரம், 9.15 மணிக்கு கொட்டாரக்கரை ஆகிய இரயில் நிலையங்களுக்கு வருகிறது. இறுதியாக காலை 10.30 மணிக்கு கொல்லம் இரயில் நிலையத்தை சென்றடைகிறது.
 

click me!