
திருச்சி
இரயில்வே துறையை தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்க்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரயில்வே தொழிலாளர்கள் மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தின் மத்திய சங்க நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள், கோட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் என்.கண்ணையா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர்கள் ஈஸ்வர்லால், வீரசேகரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த க் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி கண்ணையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ""இரயில்வே துறையை தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்ப்பது,
நிரந்தர தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது,
பயணிகள் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் ஓய்வுபெற்றவர்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற செயல்களை மத்திய அரசு செய்து வருவது கண்டனத்துக்கு உரியது.
இந்தியன் இரயில்வேயில் இரண்டரை இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தொழிற்சங்கங்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, தற்போது 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், ஓய்வுபெற்ற 65 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களை, குறிப்பாக இரயில்களை ஓட்டும் லோகோ பைலட்டுகள், கார்டுகள், நிலைய அதிகாரிகள், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் சிக்னல் டெக்னீசியன் என இரயில்களை பாதுகாப்பாக இயக்குவதில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் நியமிக்கும் முடிவை எஸ்.ஆர்.எம்.யு. எதிர்த்து வருகிறது.
எனவே, இலட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும். அமெரிக்கா மற்றும் பிரான்சு நாட்டு நிறுவனங்களின் துணையோடு உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிமனைகளை அமைக்க மத்திய அரசும், இரயில்வே அமைச்சகமும் எடுத்து வரும் முயற்சிகளால் இந்தியா முழுவதும் இரயில்வேயில் பணியாற்றி வரும் சுமார் 2 இலட்சம் நிரந்தர தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள், சரக்கு இரயில்களின் நாள்தோறும் பராமரிப்பு பணிகளை குறைந்த சம்பளத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிடவேண்டும்.
இரயில்வே காலி பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்பும்போது, தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர்களது சொந்த மாநிலத்திலேயே நியமிக்க வேண்டும்,
பிற மாநில பணியாளர்களுக்கு உள்ளூர் மொழி பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
வருமான வரி உயர்வு உச்ச வரம்பை ரூ.5 இலட்சமாக உயர்த்த வேண்டும்" இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பாராளுமன்ற முற்றுகை போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு மெத்தனமாக இருந்து வருவதால், வருகிற மே 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் 11-ஆம் தேதி காலை 6 மணி வரை மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இந்த போராட்டத்தில் 24 மணி நேரத்திற்கு ஒரு பிரிவினர் என்ற வகையில் மூன்று குழுக்களாக பிரிந்து, தென்னக இரயில்வேயின் பொது மேலாளர், கோட்ட மேலாளர்கள், பணிமனை மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பும், முக்கிய இரயில் நிலையங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.