மத்திய அரசின் அடுத்த சட்டத்தையும் எதிர்க்க தமிழக அரசு முடிவு - தொழிலாளர்களை பாதித்தால் சும்மா விடுவோமா? 

 
Published : Mar 30, 2018, 07:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
மத்திய அரசின் அடுத்த சட்டத்தையும் எதிர்க்க தமிழக அரசு முடிவு - தொழிலாளர்களை பாதித்தால் சும்மா விடுவோமா? 

சுருக்கம்

Tamil Nadu government decided to oppose central government for other law

திருச்சி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்டம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பாதிப்படைய செய்வதால் அந்த சட்டத்தை தமிழகம் கடுமையாக எதிர்க்கும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சி மலைக்கோட்டை கிளையில் டீசல் செயல்திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. 

இதற்கு சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி முன்னிலை வகித்தனர். திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.

இந்த விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டீசல் செயல்திறனில் சாதனை படைத்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 500 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

அப்போது அவர் பேசியது: "கும்பகோணம் கோட்டம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக டீசல் செயல் திறனுக்கான விருதை பெற்று உள்ளது. தேசிய அளவில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இடையே நடைபெற்ற செயல் திறன் போட்டியில் தமிழகம் 11 விருதுகளை பெற்றது. இதிலும் கும்பகோணம் கோட்டம் 2 விருதுளை தட்டி சென்று உள்ளது.

ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக இருந்த போது 2000 புதிய பேருந்துகளை விடுவதற்கு ஆணை பிறப்பித்திருந்தார். அத்துடன் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகளை விட நிதி ஒதுக்கீடு செய்தார். 

எனவே, இந்தாண்டு இறுதிக்குள் நவீன வசதிகளுடன் தனியார் பேருந்துகளுடன் போட்டி போடும் வகையில் 5000 புதிய பேருந்துகள் தமிழகத்தில் விடப்படும்.

டீசல் சிக்கனம் செய்தால் எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும். தற்போது ஒரு லிட்டருக்கு 5.69 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுவதை 5.71 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு ஓட்டுனர், நடத்துனர்களுக்கு ஓய்வறை, கழிவறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களது நலனை இந்த அரசு பேணிக்காத்து வருகிறது. 60 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகை முழுமையாக வழங்கப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்டம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை பாதிப்படைய செய்யும் என்பதால் அதில் சில திருத்தங்களை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். திருத்தங்கள் செய்யப்படவில்லை என்றால் அந்த சட்டத்தை தமிழகம் கடுமையாக எதிர்க்கும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் எம்.பி.க்கள் ரத்தினவேல், மருதராஜா, எம்.எல்.ஏ.க்கள் பரமேஸ்வரி முருகன், சந்திரசேகர், அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் ரவீந்திரன், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சித்தார்தன் ஆகியோரும் பங்கேற்றனர். 

விழாவின் இறுதியில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) ராஜ்மோகன் நன்றித் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!