
மேலூர் கோவில் கிணற்றில் கட்டுக் கட்டாக பழைய 500 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. மொத்தம் 2 இலட்சத்து 49 ஆயிரத்து 500 ரூபாய்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே புகழ்பெற்ற திருமறைநாதர் சிவன் கோவில் இருக்கிறது. நேற்று, சனி பிரதோஷம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான அடியார்கள் பேருந்துகள் மற்றும் கார்களில் இந்த கோவிலுக்கு வருகைத் தந்தனர்.
கோவிலின் தென்பகுதியில் தண்ணீர் வற்றிய பழமையான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குள் ரூபாய் நோட்டுக்கள் கிடப்பதாக கோவில் காவலாளி மனோகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலூர் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் கோட்டை முருகனிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த தகவல் கோவில் சுற்றியும் பரவியதால் அங்கு கூட்டம் அள்ளியது.
இதைத் தொடர்ந்து கோவில் ஊழியர்கள் கிணறுக்குள் இறங்கி ரூபாய் நோட்டுகளை வெளியே எடுத்தனர். அப்போது தான் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவை அனைத்தும், 500 ரூபாய் நோட்டுகள். மொத்தம் ரூ.2 இலட்சத்து 49 ஆயிரத்து 500 இருந்தது.
சனி பிரதோஷத்திற்கு கோவிலுக்கு வந்திருந்த அடியார்களின் கூட்டத்தைப் பயன்படுத்தி மர்ம நபர் யாரேனும் இந்த ரூபாய் நோட்டுக்களை கிணற்றினுள் போட்டிருக்கலாம் என கிளப்பிவிடப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளதால் இதன் இணை இயக்குனர் நடராஜனின் ஆலோசனைபடி ரூபாய் நோட்டுக்கள் மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதுகுறித்து, மேலூர் தாசில்தார் மற்றும் காவலாளர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.
கோவில் கிணற்றில் மதிப்பற்ற பழைய 500 ரூபாய் நோட்டுகள் கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை கிளப்பியது.