
மாணவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி வகுப்புக்கு செல்லும் வரை ஆசிரியர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி வாகனம் மோதியதில் 2ம் வகுப்பு படித்துவந்த மாணவன் தீக்ஷித் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர், தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மாணவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி வகுப்புக்கு செல்லும் வரை ஆசிரியர்கள் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிதிலமடைந்த 10 ஆயிரம் பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளதாகவும், முதல் கட்டமாக இந்தாண்டு ரூ.1,300 கோடி மதிப்பில் பள்ளி கட்டடங்கள் கட்டப்படும். இதில் கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடங்கும். மேலும் பள்ளி வாகனங்களை இயக்குவதற்கு விதிமுறைகள் உள்ளது. பள்ளி வாகனத்தில் கண்டிப்பாக உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்.
அத்துடன் வாகனத்திலிருந்து குழந்தைகளை இறக்கி விடும்போது 2 ஆசிரியர்கள் பணியிலிருந்து, மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்லும் வரை கண்காணிக்க வேண்டும். இந்த விதிகளை மீறினால் பள்ளி நிர்வாகம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். பள்ளி நிர்வாகம் முறையாக விதிமுறைகளை பின்பற்றி இருந்தால் வேன் மோதி இறந்த 2 ஆம் வகுப்பு மாணவனை காப்பாற்றி இருக்கலாம். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 4 ஆம் தேதி கல்வி அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இதுபற்றி தீர விவாதிப்போம். இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுப்போம். சில மாணவர்கள் பஸ் நிற்கும்போது ஏறாமல் ஓடும்போது ஏறுகிறார்கள். அதனை மாற்ற வேண்டும். மேலும் இது தொடர்பாக பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.