தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகளை 3 நாட்களுக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டுள்ளது.
510 பதவிகளுக்கு தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி நிறைவு பெற்றது. 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் 17 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் காலியாக உள்ளன. இதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முன்னேற்பாடுகளையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுரை, உள்ளிட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளின் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் டாஸ்மாக் மூடப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்றுள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்களும் மூட வேண்டும்
குறிப்பிட்ட காலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்
மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்.. பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!