
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலும், 22ம் தேதியும் மதுபான கடைகள் இயங்கவும் விற்கவும் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 56 ஆயிரம் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் காண்கிறார்கள்.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்டுபாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவை முன்னிட்டு 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி இரவு 12 மணி வரை மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22 ஆம் தேதியும் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது இடங்களிலும் தனியார் கட்டிட சுவர்களிலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள், வரைதல் அல்லது சுவரொட்டிகள் ஒட்டுதல் கூடாது எனவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட கட்டுபாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.