
நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அவர் விரைவில் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக தெரிவித்தார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்தாலும், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்களில் நெட்டிசன்களின் காமான்ட்டுகள் பரபரப்பாகவே உள்ளது.
குறிப்பாக தமிழகத்துக்கு காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு போராட்டம், இலங்கை பிரச்சனை, முல்லை பெரியாறு உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தலையை காட்டாத ரஜினி, தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதாக என சில அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல் வந்தது. இதையடுத்து, ரஜினி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன், போயஸ் கார்டன் பகுதி எஃகு கோட்டை போல் இருந்தது. அங்கு அன்னியர்கள் நுழைய முடியாதபடி எந்நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அவரது மறைவுக்கு பின்னர், போலீஸ் பாதுகாப்பு படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால், பல்வேறு அமைப்பினர் போயஸ் கார்டனில் நுழைய திட்டமிடுகின்றனர் என போலீசார் கூறுகின்றனர்.