சூடானில் நடைப்பெற்று வரும் உள்நாட்டு போர் எங்கள் வாழ்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஒரு செட் துணியுடன் மட்டுமே திரும்பியுள்ளோம். உயிரோடு தாயகம் திரும்புவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லையென தாயகம் திரும்பியவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் 3000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் காவேரி என்ற திட்டம் தொடங்கப்பட்டு சூடானில் உள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டு நேற்று டெல்லி அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து இன்று காலை 5 பேர் சென்னைக்கும் 4 பேர் மதுரைக்கும் அழைத்துவரப்பட்டனர். சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்டவர்கள் அனைவரையும் தமிழ்நாடு அரசு சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தாயகம் திரும்பிய கிருத்திகா என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல கனவுகளுடன் சூடான் சென்றதாகவும், 8 வருடமாக பார்த்த சூடானுக்கும் தற்போது அங்கு நிலவும் சூழல் முற்றிலும் மாறுபட்டது என கூறினார். இரண்டு நாளில் சகஜ நிலை திரும்பும் என எண்ணியதாகவும், ஆனால் போர் தீவிரமடைந்ததாக தெரிவித்தார். துணை ராணுவ படையினுடைய தலைமை அலுவலகம் அருகாமையில் வீடு இருந்ததால் , வீடு கார் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் சொத்தையும் இழந்து ஒரு பையில் இரண்டு துணியுடன் வந்துள்ளதாக கூறினார்.
மாணவி தியா கூறுகையில், என்னுடைய கல்வி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த போர் என் வாழ்வில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய உடனே அன்றைய தினமே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. 26 மணி நேரம் பயணித்து விமான நிலையம் வந்ததும் தான் நல்ல உணவு கிடைத்ததாக கூறினார். எங்களுக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்பட கூடாது எனவும், இனி என் கல்வி என்னவாக போகிறது என தெரியவில்லை என கூறினார்.