தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யுமா? விளக்கம் அளிக்கும் வெதர்மேன்!! | Tamilnadu Rain

By Narendran SFirst Published Nov 16, 2021, 11:44 AM IST
Highlights

#Tamilnadu Rain | அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது. அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கட்டுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் வெள்ள நீர் வடியாமல் குளம் போல் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணித்தது. அதன்படி 13 ஆம் தேதி அந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. ஆனால் இந்த காற்றழுத்தம் வரும் 18 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தீவிரமடையும் என சொல்லப்பட்டுள்ளது. இது இரு வேறு விதமாக பயணிக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

மேலும் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி புயலாக மாறி, ஒரே தீவிரத்தன்மையுடன் இருந்தால் அது மேற்பகுதியில் நகர்ந்து மத்திய மற்றும் வடக்கு ஆந்திராவின் மேற்கு, வடமேற்கு திசையில் உயர்ந்த காற்றால் நகரும் என்றும் இன்னொன்று அந்த குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகவோ புயலாகவோ மாறினால், அது குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்து குறைந்த காற்றால் தெற்கு ஆந்திராவுக்கோ அல்லது வட தமிழகத்திற்கோ செல்லும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ரேடாரை பொருத்தவரை புதிய காற்றழுத்தம் உருவானதை சுற்றியுள்ள பகுதிகள் பச்சை நிறமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 பெய்யும் மழை குறித்தான அப்டேட்டை தமிழ்நாடு வெதர் மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பேஸ்புக் பதிவில், சினாரியோ 2 நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மழை தொடங்க இன்னும் 40 மணி நேரம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சென்னையை பொருத்த வரை இந்த மழை மெதுவாக அதிகரிக்கக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இதனை நம்மால் உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளார். நவம்பர் 7, 11, 18 ஆம் தேதிகளில் பெய்யப் போகும் மழைக்காக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக் கடலை நோக்கி நகர்வதால் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று கூறியுள்ள அவர், அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் தாழ்வு பகுதியானது தமிழக கடற்கரையோரம் நெருங்கும் சமயத்தில், மழை கடற்கரையோர பகுதிகளில் பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

click me!