தமிழகமே முடங்கியது; பொதுமக்கள் தவிப்பு…

First Published Dec 6, 2016, 11:21 AM IST
Highlights


வேலூர்,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கிறது என்ற்உ அறிவிப்பு வெளிவந்ததால், தமிழகத்தில் நேற்று மாலை முதல் பேருந்து நிறுத்தம், கடைகள் அடைப்பால் பொதுமக்கள் தவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு நேற்று முன்தினம் மாலை திடீர் இதய முடக்கம் ஏற்பட்டது. இந்த தகவல் வெளியானதையடுத்து அ.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு கருதி நேற்று பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதைத் தவிர்த்தனர். எனினும் பேருந்து போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நேற்று மதியம் முதலமைச்சரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டதால் அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வழக்கமான நேரத்தைவிட முன்னதாகவே வீடுகளுக்கு திரும்பினர். பள்ளிகளுக்கு மதியத்திற்குமேல் விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை முதலமைச்சர் உடல்நிலை குறித்து திடீரென அனைத்து தொலைக்காட்சி செய்திகளிலும் ஒரு தகவல் பரவியது. இதனால் வேலூர் காந்திரோடு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா படத்துடன் கூட்டமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் எதிரொலியாக நகரின் அனைத்து தெருக்கள், சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பெட்ரோல் பங்குகள் 3 நாட்களுக்கு திறக்கப்படாது என்றும் தகவல் பரவியது. இதனால் வேலூர், காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பி சென்றனர்.

வேலூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியூர்களுக்கு செல்வதற்காக தயாராக நின்ற பேருந்துகள், முதலமைச்சர் உடல்நிலை பற்றிய தகவல் அறிந்ததும் பயணிகளை அங்கேயே இறக்கிவிட்டு விட்டு பணிமனைகளுக்கு புறப்பட்டு சென்றன.

திருநெல்வேலி உள்பட தொலைதூர ஊர்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் அதில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் டிக்கெட் எடுத்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்பி வழங்கப்பட்டது. இதனால் பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

வெளியூரிலிருந்து வேலூருக்கு வந்தவர்களும் ஊர் திரும்ப முடியாமல் தவிப்புக்கு உள்ளாயினர். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

நகரின் முக்கிய பகுதிகளில் காவலாளார்கள் குவிக்கப்பட்டி இருந்தனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர். கடைகளுக்கு வந்திருந்த பொதுமக்கள், வேலைக்கு சென்றிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேக வேகமாக வீடுகளுக்கு திரும்பினர். வாகனங்களில் வெளியில் வந்திருந்தவர்களும் வீடுகளுக்கு திரும்பினர். இதனால் நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன.

காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளும் மூடப்பட்டன. செவ்வாய்க்கிழமை (அதாவது இன்று) மார்க்கெட் திறக்கப்படாது என்று கூறப்பட்டதால் நேற்று கடைகள் மூடப்படும் நேரத்தில் காய்கறிகளின் விலை 3 மடங்காக உயர்ந்தது. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு பால்வாங்கக்கூட முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
 

click me!