
தமிழகத்தில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கபடுவது வழக்கம். நிகழாண்டில் பொங்கல் பண்டிகையில் போது சென்னையிலிருந்து 10 ஆயிரத்து 288 பேருந்துகளும், மதுரை , திருச்சி உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 5 ஆயிரத்து 993 பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதே போல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக 15 ஆயிரத்து 720 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர், பொங்கல்பண்டிகையொட்டி சென்னை உள்ளிட்ட பிற நகரங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்து குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல முன்பதிவு தொடங்கியுள்ளது. முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் செல்பவர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் WWW.TNSTC.IN என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு, திருப்பதிக்கு செல்லவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அரசு இணையதளத்திலோ , பேருந்து நிலையத்திலோ முன்னதாகவே இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தனியார் பேருந்து முன்பதிவு இணையதளங்களிலும் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளாலம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதே போல் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் மற்றும் மாதாவரம் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோன்று பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவடைந்த பின்பு சொந்த ஊரில் இருந்து திரும்புவோரின் வசதிக்காக 17 ஆயிரத்து 719 பேருந்துகள் இயக்கப்பட்டன.தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அரசு விரைவு பேருந்துகளில்முன்பதிவு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.