
ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடத்தபட்டுவருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர்களுக்கும் ஏற்றவகையில் புத்தகங்கள் தள்ளுபடி முறையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படும். சென்னையில் நடைபெறும் இந்த கண்காட்சி பொதுமக்களிடையேயும் புத்தக வாசிப்பாளர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்காட்சிக்கு வந்து பயனடைவது வழக்கம். பட்டிமன்றம், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி திருவிழா வரும் ஜனவரி 6 ஆம் தேதி நந்தனம் ஒஎம்சிஏ மைதானத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23 தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார் என்று புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாபெரும் புத்தக கண்காட்சி திருவிழாவில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. ஜனவரி 6 தேதி முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவர் என்று சொல்லபட்டுள்ளது.
வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சியில் மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துவங்க நாளான, ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சி தொடங்கி வைக்க இருக்கிறார். புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் விழாவில் 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் கவுரவிக்க இருப்பதாக தெரிவித்த நிர்வாகிகள் பபாசி வழங்கும் விருதுகளையும் அவர் வழங்குவார் என தெரிவித்தனர்.
புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். புத்தக கண்காட்சிக்கு வரும் மக்களை கவரும் வகையில் பல வகையான உணவு ஸ்டால்களும் இங்கு அமைக்கப்படும். பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் , சிறுகதை தொகுப்புகள், இளம் எழுத்தாளர்களில் புத்தகங்கள், மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள், மொழி, இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், வரலாறு, தொழில்நுட்பம், உணவு, பொது அறிவு, உடல்நலம், விளையாட்டு குறித்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான கார்டூர்ன் புத்தங்கள் இங்கு விற்பனை செய்யப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.