நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக லெப்டினண்ட் ஜெனரல் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விபத்து ஏற்பட்ட உடன் சம்பவ இடத்தில் இருந்து கம்பளி வழங்கி, தண்ணீர் பாய்ச்சி, தீயை அணைத்த மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உதவியாளர்கள் என அனைவரையும் கவுரவிக்க ராணுவம் முடிவு செய்தது. இதன் பேரில், தக்ஷின பாரத் ராணுவ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அருண் வருகை தந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, இன்று காலை மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் நாகேஷ் சதுக்கத்தில், உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள், வருவாய்துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட மீட்பில் உதவியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை லெப்டினென்ட் ஜெனரல் அருண் வழங்கினார். தொடர்ந்து, நஞ்சப்பா சத்திரம் காட்டேரி பண்ணை பகுதி மக்களுக்கு அரிசி உட்பட பல்வேறு உதவி பொருட்களை அருண் தலைமையில் ராணுவத்தினர் வழங்கினர்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லெப்டினன்ட் ஜெனரல் அருண்;- மக்களுக்காக பாதுகாப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இந்த சூழ்நிலையில் விபத்து நடந்துள்ளது. கிராம மக்கள் உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த தருணம் பெருமையாக உள்ளது. விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வருணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதிரியான விபத்து எதிர்பாராதது. இதில் மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழக அரசுக்கு மிகப்பெரிய நன்றி. காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்களும் துரிதமாக செயல்பட்டு மீட்பு உதவிகளை செய்தனர். ஹெலிகாப்டர் விழுந்ததை முதலில் பார்த்தவருக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவியை ஜெனரல் அருண் வழங்கினார்.