
கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கேரளாவுக்கு ஆட்டோ மூலம் கடத்த முயன்ற 500 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கிடங்கில் ஒப்படைத்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் எஸ்கேப் ஆகிவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி, மண்ணெண்ணெய், மணல் போன்றவை கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. கடத்தலில் ஈடுபடுபவர்கள் 'பெரிய இடம்' என்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரிகளும் முன்வருவதில்லை.
அப்படியே, நேர்மையான அதிகாரிகள் யாராவது நடவடிக்கை எடுக்க வந்தால் கடத்தலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர் கூட அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுகிறார். ஊர் மக்களுக்கு இதில் ஈடுபடும் அரசியல்வாதி யார்? யாரின் பின்னணியில் இந்த கடத்தல் நடக்கிறது? என்பது போன்ற தகவல்கள் தெரிந்தாலும் அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வருவதில்லை என்று அப்படியே விட்டுவிடுகின்றனர்.
பெரியளவில் லாரிகள், கண்டெய்னர்களில் கடத்தல் நடப்பதை விட்டுவிடுவதையும், ஆட்டோ, கார் போன்ற சிறிய வாகனங்களில் கடத்தல் நடக்கும்போது போலீஸ் சீறிப்பாய்ந்து பிடிக்கின்றனர். ஆனால், கடத்தலில் ஈடுபட்டவர்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் மட்டுமே பிடிபடுவதையும் இம்மாவட்ட மக்கள் கண்ணூடே கண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் காவலாளர்கள் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வருவாய்துறை அதிகாரிகளும், காவலாளர்களும் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
அதன்படி, மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கிச் சென்ற ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிறுத்துமாறு காவலாளர்கள் சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் அதன் ஓட்டுநர் ஆட்டோவை சட்டென்று நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
அதனைத் தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சிறு சிறு மூட்டைகளில் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றதை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
அதன்படி, ரேசன் அரிசியினை காப்புக்காடு அரசு கிடங்கிலும், ஆட்டோவை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.