இப்போ விழுமோ! எப்போ விழுமோ! என இருக்கும் பள்ளிக் கட்டிடம்; மாற்றி தரக்கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 08:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
இப்போ விழுமோ! எப்போ விழுமோ! என இருக்கும் பள்ளிக் கட்டிடம்; மாற்றி தரக்கோரி பெற்றோர், மாணவர்கள் போராட்டம்...

சுருக்கம்

School building in bad condition Parents and students struggle to change ...

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் 'எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்' என்ற நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் மறியல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்துள்ளது கூவத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் தலைமையாசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்களும் 62 மாணவ, மாணவிகளும் உள்ளனர். 

இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டிடம் ஒன்று, தற்போது உள்புறம், மேல்கூரை சுவர்கள் என மொத்தமாக கீறல்கள் விழுந்தும், சிமெண்ட் பெயர்ந்தும் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது. 

இது ஒருபக்கம் இருக்க, மழைக் காலங்களில் இந்தக் கட்டிடத்தின் சுவர்களில் மின்சாரம் பாய்ந்து வருகிறது. எனவே, ஆபத்தான இந்தப் பழையக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், போராட்டமோ, உயிர்பலியோ எதுவும் நடக்காமல் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் நம்ம ஊரு அதிகாரிகள். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் பள்ளியில் நடைபெற்றது. அப்போது பழைய கட்டிடத்தின் வெளிப்புறம் மேல்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி மாணவர்களுடன் கூடினர்.  புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செயலாளர் அடங்கா அன்பு தலைமையில் தே.மு.தி.க. லத்தூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி கோவிந்தசாமி மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

"வேண்டும்! வேண்டும்! பழுதடைந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும்!" என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

இதுகுறித்து தகவலறிந்த மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜி, கொடூர் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, "பழுதடைந்த பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் பல முறை காயமடைந்ததாகவும், அதன் காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப முடியாமல் அவதிப்படுவதாகவும்" பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும், "அந்தக் கட்டிடத்தை நேரில் பார்வையிட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற துணை காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜி மற்றும் வருவாய் துறையினர் அந்த பள்ளிக்கு உடனே சென்று ஆய்வு செய்தனர். 

பின்னர், "இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

PREV
click me!

Recommended Stories

கபட நாடக அரசு.. யாருக்காக இந்த ஆட்சி? திருத்தணி சம்பவத்தால் டென்ஷனான தவெக விஜய்!
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்திக்கு ஓகே சொன்ன மத்திய அரசு!