ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த ரயிலில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு என்னவானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின், பாலசோர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகிலுள்ள மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அதே வழியில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக உள்ளூர் மக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
undefined
12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்பு பணியில் தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விடிய விடிய நடந்த இந்த மீட்பு பணியில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துகுள்ளான ரயில் வண்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 100 பேர் வரை பயணம் செய்ததாகவும், இதில் 30 பேர் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், குமார் ஜெயந்த் , அதுல்யா மிஸ்ரா, அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோர் ஒடிசா சென்றுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்த நிலையில் 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை. 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.14 பேர் காயமடைந்துள்ளனர்.
மீதமுள்ள 09 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் பலியானவர்கள் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தை சேர்ந்த கூழி தொழிலாளர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..ஒடிசா விபத்தில் உயிர் பிழைத்த 250 பயணிகள்: சிறப்பு ரயிலில் சென்னைக்கு வரும் 133 பேர் - முழு விபரம்
இந்த நிலையில், ஒடிசா சென்ற குழுவில் இடம்பெற்றுள்ள பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை ஆடையாளம் காணப்படவில்லை. பல சடலங்களை அடையாளம் காண முடியவில்லை.
அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி தகவல் இல்லை. பயணிகளை தொடர்பு கொள்ள முடியாத உறவினர்கள் சிறப்பு ரயிலில் ஒடிசா வரலாம்" என்று தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் பயணித்தவர்களில் தமிழர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?