
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்ப்ன திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு துணை போகக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, இன்று வரை அந்த மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், ‘ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் உள்ள மீத்தேன் துரப்பன குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு தமிழக அரசிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்க்கும்போது, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக அரசு திரைமறைவில் மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு துணை போய்க் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் நெடுவாசல் திட்டம் குறித்து அனுப்பப்பட்ட கடித விவரங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடவில்லை. இப்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் தனியார் நிறுவனத்துடனும் கடிதத் தொடர்பில் அதிமுக அரசு இருக்கிறது.
விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு துணைபோகப்போகிறதா தமிழக அரசு என்பதை எடப்பாடி பழனிசாமி உடனடியாக விளக்க வேண்டும என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
. தமிழக விவசாயிகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு அதிமுக அரசு துணை போகக்கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.