அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது


அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

திருத்தப்பட்ட மிகை ஊதியச்  சட்டம் 2015இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21000 என உயர்த்தப்பட்டுள்ளது.  இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர உச்சவரம்பும் ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை  நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை  கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு  மிகை ஊதியம்  மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம்  மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000/- ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்!

இதன் மூலம், மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16800ம் பெறுவர்.  மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்   2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளர்களுக்கு 402 கோடியே 97 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படவுள்ளது. 

இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள்  தனியே வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!