வாங்க.. வாங்க! ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு! பொதுமக்களுக்கு அழைப்பு!

Published : Sep 11, 2025, 07:17 PM IST
TN Governor TN Ravi to host Navaratri Golu at Raj Bhavan

சுருக்கம்

செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை நடைபெறும் நவராத்திரி கொலுவில் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வருகிற செப்டம்பர் 22-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு 2025' கொண்டாட்டங்களில் பார்வையாளர்களாகப் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 'நவராத்திரி கொலு 2025' செப்டம்பர் 22 (திங்கட்கிழமை) முதல் அக்டோபர் 1 (புதன்கிழமை) வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, வரும் 22-ம் தேதி சென்னை, ஆளுநர் மாளிகையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

கலாசார நிகழ்ச்சிகள்:

தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளிலும் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் பார்வையாளர்களாக கலந்து கொள்ளலாம்.

பதிவு செய்வது எப்படி?

விழாவில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வருகிற 20-ம் தேதிக்குள் https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ என்ற இணையதள இணைப்பு அல்லது QR குறியீடு வழியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவுகளில் பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் வருகைக்கான விரும்பிய தேதி போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை:

'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் ஒதுக்கப்பட்டுள்ள தேதியையும், நேரத்தையும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும். பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே, ஆளுநர் மாளிகை இரண்டாம் நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றினை உடன் கொண்டு வருவது அவசியம்.

வெளிநாட்டினருக்கு அனுமதி:

நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வெளிநாட்டினரும் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், நவராத்திரி கொலு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கான எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கும் உரிமை தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு உண்டு என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மக்களே வாய்ப்பை தவறவிட்டுடாதீங்க.. ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!
முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!