
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே பீடர் ரோடு நகரைச் சேர்ந்த ரவிபாண்டியன் என்பவரது மகன் சக்தி கணேஷ் (20). இவர் ஆக்டிங் டிரைவர் மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சக்தி கணேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையில் மதித்தோப்பு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சக்தி கணேஷ் உடல் ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சிதறி கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சக்தி கணேஷ் தான் தற்கொலை செய்வதற்கு முன்பாக தன்னுடைய நண்பர் ஒருவருக்கு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ஏடேய் சந்தோஷ்.. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம்.. உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் போன் போகவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே.. பார்ப்போம்.. எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான். நீ காலையில் போனை எடுத்துப் பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன் எண்ணை வந்து பார் என்று பேசியுள்ளார்.
காதல் தோல்வி காரணமாக கடந்த சில தினங்களாக மனவேதனையில் இருந்து வந்த சக்தி கணேஷ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.