
நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை அகற்றப்படும் டாஸ்மாக் கடைகள், குடியிருப்பு மற்றும் நகர் பகுதிகளில் மீண்டும் திறக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து அந்தந்த பகுதிகளில் பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளி டாஸ்மாக் கடைகளை பெண்கள் அடித்து உடைத்து சூறையாடும் சம்பவம் தினமும் அரங்கேறி வருகிறது.
இதற்கிடையில், நகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் தமிழ்நாடு அரசு கருவூலத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் மே 5ம் தேதி அளித்த உத்தரவை மீறி, டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் புதிதாக கடைகளைத் திறப்பதற்கு கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மதுக்கடைகள் பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வங்கிகள் ஆகியவற்றின் அருகில் அமைவதால் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று ஊராட்சி மன்றங்களின் கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊராட்சிமன்றத் தீர்மானங்களை மதிக்காமல், மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதால் அதற்குத் தடைவிதிக்கக் கோரி கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
பொதுமக்களின் நலனுக்காக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை செயல்படுத்தாமல், அவற்றை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
தமிழக மக்கள் குறிப்பாக, பெண்களின் போராட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் எப்படியாவது மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான மாபெரும் போராட்டம் வெடிக்கும்.
தமிழகத்தில் மதுக்கடைகளை நிர்மூலமாக்கும் வரையில் போராட்டங்கள் ஓயாத பேரலையாக பரவும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.