
கடந்த சில ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி கடந்த மார்ச் 30ம் தேதி, நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை அகற்றப்படும் டாஸ்மாக் கடைகள், குடியிருப்பு மற்றும் நகர் பகுதிகளில் மீண்டும் திறக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து அந்தந்த பகுதிகளில் பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளி டாஸ்மாக் கடைகளை பெண்கள் அடித்து உடைத்து சூறையாடும் சம்பவம் தினமும் அரங்கேறி வருகிறது.
இதற்கிடையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு, நீதிமன்றத்தில் மனு அளித்தது. இது தொடர்பான விசாரணை இன்று வந்தது.
அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர், பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பகுதியோ, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதியிலோ டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம்.
மேலும் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தரப்பினர், தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுபோன்று 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அரசு திட்டமிட்டபடி 3000 டாஸ்மாக் கடைகளை மூட முடிவெடுத்துள்ளோம். மூடிய கடைகளை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.