
மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 7ம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இதில், கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அங்கிருந்த அதிகாரிகள் பெரும் இன்னல்களை விளைவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, சமூக நல அமைப்பினரும், மாணவர்கள் சங்க அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ நிர்வாகம் மூலம் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது குறித்து பல தரப்பில் பேசப்பட்டது. இதனால், மத்திய பள்ளி கல்வி துறையை சேர்ந்த சிபிஎஸ்இ நிர்வாகத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகம் முன்பு, இன்று காலை இந்திய மாணவர் அமைப்பினர் திரண்டனர். அவர்களுடன், நீட் தேர்வு எழுதி மாணவ, மாணவிகளும் சென்றனர்.
அப்போது, அவர்கள் நீட் தேர்வுக்கு பரிந்துரை செய்த சிபிஎஸ்இ நிர்வாகத்தை கண்டித்து, அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். பின்னர், சாலையில் கிடந்த கற்களை எடுத்து, அந்த கட்டிடத்தின் மீது சரமாரியாக வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால், அங்கு போலீசாருக்கும், மாணவர் அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து இந்திய மாணவர் அமைப்பினர் கூறுகையில், “நீட் தேர்வு என்பது ஏழை மாணவர்களின் கனவில் மண்ணை வாரி கொட்டுவதற்கு சமம். இதுபோன்ற தேர்வு நடத்துவதால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள்.
மத்திய அரசு, மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்த தடை செய்ய வேண்டும். மேலும், கடந்த 7ம் தேதி தேர்வு எழுத சென்ற மாணவர்களின் சட்டைகளை கிழித்தும், மாணவிகளின் உடைகளை களைந்தும் சோதனை நடத்தினர். இது மனித உரிமை மீறல் செயலாகும்” என்றனர்.