
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் தேடி வரும் நிலையில், இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
கர்ணன் சென்னையில் நீதிபதியாக பணியாற்றியபோது சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் அளித்தார். இதையடுத்து ,கர்ணன் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கர்ணன் எந்த ஒத்துழைப்பும் அளிக்காததால், அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தனர்.
இதையடுத்து அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நீதிபதி கர்ணன் சார்பில், உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள 6 மாத சிறை தண்டனை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் சென்னையில் தான் இருப்பதாகவும், எங்கும் ஓடிப்போகவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் நீதிமன்ற தண்டனை தொடர்பாக குடியரசுத் தலைவரை கர்ணன் சந்திக்க உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.