வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது.
வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளை நம்பிக் கொண்டிருக்காமல், மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது.
டாஸ்மாக் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுக்கு நீதிபதிகள் அறிவுரைகளை வழங்கினர். மதுவால் ஒருதலைமுறையே சீரழிந்துவிட்டது. இனி வரும் தலைமுறையாவது காக்கப்பட வேண்டும். தமிழக அரசு வருவாய்க்காக டாஸ்மாக் மதுக்கடைகளையே நம்பிக் கொண்டிருக்காமல் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் டாஸ்மாக் பார்களில் சிசடிவி கேமராக்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பல குற்றங்கள் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் பல குற்றச்சம்பவங்களை தடுக்கலாம். அனைத்து கிராமங்களிலும் கிராம சபைகளை கூட்டி டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றலாம் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றால், டாஸ்மாக்களில் வாகனம் நிறுத்துமிடம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் பிப்ரவரி 28-ம் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.