ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் நடந்த நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணுவை புகழந்து தள்ளினார். விழாவில் உரையாற்றிய ஸ்டாலின், ''இந்த விழாவுக்கு நான் நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். இப்போது பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு; அதேபோல் நல்லகண்ணு ஐயாவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்திருக்காது.
undefined
திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் தோழர் நல்லகண்ணு உறுதுணையாக இருந்து வருகிறார். அவர் எந்த கருத்தையும் அடக்கமாக, ஆழமாக, அமைதியாக தெளிவுடன் சிந்தித்து எடுத்துரைக்குரியவர். தொடர்ந்து நீங்கள் எங்களை போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும்; துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்!எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களும் நூற்றாண்டு காண்கிறார்! இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம்! தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது! தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி ‘தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ என பெயர் சூட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐயா நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தான் (முன்பு திருநெல்வேலி மாவட்டம்) பிறந்து வளர்ந்து மிகப்பெரும் மக்கள் தலைவராக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.