அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
மாணவர்கள் உயர் கல்வி படிக்க விரும்பும் கல்லூரியாக இருப்பது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே இந்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் நேற்று தான் தெரியவந்துள்ளது. கடந்த 23ஆம் தேதி இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனது காதலனோடு பேசிக்கொண்டு இருந்த மாணவியை வீடியோ எடுத்து அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த மாணவியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
undefined
திமுக நிர்வாகி கைது
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக நிர்வாகி என கூறியுள்ளார். சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் குற்றம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை துரித நடவடிக்கை எடுத்துள்ளது. கைதானவருக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த குற்ற வழக்கில் யார் கைது செய்யப்பட்டாலும் அவரை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசுவதை அண்ணாமலை வாடிக்கையாக வைத்துள்ளார்' என விமர்சித்தார்.
அதிமுக போராட்டம்- ஜெயக்குமார் கைது
இதனிடையே அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பாக அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அதிமுகவினர் சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறம் உள்ள சமூக நல கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக கூறினார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிக்கே பாலியல் வன்கொடுமை நடைபெற்றதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் திமுக நிர்வாகி என குற்றம்சாட்டினார்.