
உக்ரைன் ரஷ்யா போர் :
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இந்தியா மாணவர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது.
இதனிடையே தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசோடு, தமிழக அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்க எம்.பிக்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனில் இருந்து டெல்லி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை அந்த குழு சந்தித்தது.
இதனிடையே தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள், கல்வியை தொடர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு :
இந்தநிலையில், தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது உக்ரைனில் அவர்களது அனுபவம் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். ஒவ்வொருவரின் பெயர் மற்றும் ஊர் விவரங்களை தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் நடந்த போருக்கு இடையே தமிழக மாணவ-மாணவிகள் எல்லையை பாதுகாப்பாக கடந்தது குறித்தும், உணவு தேவையை எவ்வாறு சமாளித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அந்த மாணவ-மாணவிகள், 2 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், உணவு வழங்கப்படும் இடத்தை வாட்ஸ்-அப் மூலம் தெரிந்து சென்றதாகவும் கூறினார்கள். மேலும், எல்லையை கடந்த பிறகு தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடு தாங்கள் நாடு திரும்ப வெகுவாக உதவியது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றியும் தெரிவித்தனர்.