தூத்துக்குடியில் தனிக்கவனம் செலுத்தும் தமிழிசை: தேர்தல் அரசியலுக்கு திரும்புகிறாரா?

By Manikanda PrabuFirst Published Dec 26, 2023, 11:30 AM IST
Highlights

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் அரசியலுக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம் என்றாலும் தமிழிசை பாஜகவில் ஐக்கியமானார். தமிழ்நாட்டில் பாஜகவை பட்டிதொட்டியெங்கும் கணிசமாக வளர்த்த பெருமை தமிழிசையையே சாரும்.

பாஜகவின் பல்வேறு பொறுப்புகளை வகித்த தமிழிசை 2019ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது சுறுசுறுப்பான பணிகளால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கவும் பட்டது. தமிழக அரசியலில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த தமிழிசை, கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

Latest Videos

மாநில அரசியலில் தனது நகர்வுகளை ஆளுநர்கள் மூலமாகவே மத்திய அரசானது சாத்தியப்படுத்திக் கொள்கிறது. மத்தியில் ஆளும் அரசு ஒருவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கிறது என்றால், அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவராகவே இருப்பார் என்பது பொதுவாக இருக்கும் கருத்து. கட்சிக்காக கடுமையாக உழைத்து, தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் இயக்க அரசியலில் பணியாற்றிய சீனியர்கள் பலருக்கும் ஆளுநர் வாய்ப்பு கிடைக்கும். பாஜகவில் அப்படி ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்த பலருக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. அதேபோல், தேர்தல் அரசியலில் மிகத் தீவிரமாக இருந்தவர்களுக்கும் பாஜகவில் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழிசை நியமனத்தின்போது, இன்னும் சில ஆண்டுகள் தேர்தல் அரசியலில் செயல்படக்கூடிய திறன் கொண்ட ஒருவரை ஆளுநர் பதவியில் அமரவைத்தது ஏன் என்ற எதிர்க் குரல்களும் எழுந்தன. தமிழிசையிடமுமே அதில் அதிருப்தி நிலவியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

அரசியல்வாதியான ஆளுநர் தமிழிசை


இந்த பின்னணியில், அண்மைக்காலமாகவே ஆளுநர் போன்று செயல்படாமல் அரசியல்வாதி போன்று செயல்பட்டு வருகிறார் தமிழிசை. பாஜகவின் கருத்துக்களை எதிரொலிப்பதுடன், ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார். தற்போது தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அவர், களநிலவரத்தை ஆய்வு செய்ததுடன் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். வேறு ஒருமாநிலத்தின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மற்றொரு மாநிலத்துக்கு வந்து களநிலவரத்தை ஆய்வு செய்ததோடு ஆளுங்கட்சியையும் விமர்சிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆனால், தமிழிசை இதுபோன்று செய்வது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும்கூட, பல்வேறு சமயங்களில் அவர் இதுபோன்று மாநில அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளார். குறிப்பாக, தூத்துக்குடியில் அவர் தனிக்கவனம் செலுத்திவருகிறார். அவரது இந்த நடவடிக்கைகள் அவர் தேர்தல் அரசியலுக்கு மீண்டும் திரும்புகிறாரா என்ற கேள்வியை பரவலாக எழுப்பியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்: ஒன்லி வெஜ்... உணவுப் பட்டியல் இதுதான்!

2006, 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தமிழிசை தோல்வியடைந்துள்ளார். இதில், 2019ஆம் ஆண்டில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் கனிமொழியிடம் தோல்வியை தழுவினார்.

இந்த சூழலில் எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலை மனதில் வைத்து தமிழிசை தனது அரசியல் ரீ-என்ட்ரிக்கான காய்களை நகர்த்தி வருவதாக கூறுகிறார்கள். இதனை தமிழிசையுமே கூட திட்டவட்டமாக மறுக்கவில்லை. இதுதொடர்பான கேள்விக்கு அண்மையில் பதிலளித்த அவர், ‘அது பின்னால் தெரிவிக்கப்படும்; அது சஸ்பென்ஸ்’ என்றார்.

தமிழிசையால் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்ப முடியுமா?


குடியரசுத் தலைவர், ஆளுநர் போன்ற பதவிகள் உட்சபட்டமானவை. இவர்கள் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்பக் கூடாது என விதி எதுவும் இல்லை. ஆனால், இந்த உட்சபட்ச பதவியை வகித்தவர்கள் பெரும்பாலும் தேர்தல் அரசியலுக்கு திரும்ப மாட்டார்கள். அதேசமயம், ஆளுநராக இருந்தவர்கள் தேர்தல் அரசியலுக்கு மீண்டும் திரும்பிய வரலாறும் உண்டு.

கேரளா பாஜகவில் மூத்த தலைவராக இருந்த கும்மணம் ராஜசேகரன், 2018ஆம் ஆண்டு மே மாதம் திடீரென மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2019 மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தனது ஆளுநர் பதவியை ராஜிமானா செய்துவிட்டு தேர்தல் அரசியலுக்கு அவர் திரும்பினார்.

அவர் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியின் போது, கர்நாடக முதல்வராக இருந்து பின்னர் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா, தேர்தல் அரசியலுக்கு திரும்பி வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார். ஆந்திரா ஆளுநராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே, தேர்தல் அரசியலுக்கு திரும்பி, மின்சாரம் மற்றும் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

எனவே, ஆக்டிவ் அரசியலில் இருந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்புவது புதிது அல்ல. அந்தவகையில், தமிழிசையால் கட்சிக்கு பலம் கிடைக்குமேயானால், அவர் மீண்டும் தாமரைக்கு வாக்கு கேட்டு வீதிகளில் வலம் வருவார்; அதற்கு கட்சித் தலைமை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் என்கிறார்கள்.

click me!