மும்மொழி, பிஎம் ஸ்ரீ: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா

Published : May 03, 2025, 10:37 PM IST
மும்மொழி, பிஎம் ஸ்ரீ: மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா

சுருக்கம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல கேரளா திட்டமிட்டுள்ளது, இது குறித்து தமிழ்நாட்டுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) கூட்டத்தில், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கும், பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கும் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.

மும்மொழிக் கொள்கை இந்துத்துவா கொள்கையின் வெளிப்பாடாக இருப்பதாகவும், இதன் மூலம் சமஸ்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது. மேலும், பிஎம் ஸ்ரீ திட்டமானது தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, NCERT பாடப்புத்தகங்களில் இந்தி பெயர்கள் திணிக்கப்பட்டிருப்பதாக கேரள அரசும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

கல்வி நிதி விவகாரத்தில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மறுத்ததால் கேரளாவிற்கு வழங்க வேண்டிய ரூ.1500 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கல்வி நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி டெல்லியில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாகவும், அவ்வாறு இணைந்தால் உடனடியாக நிதியை விடுவிப்பதாக மத்திய அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர கேரள அரசு தயாராக இல்லை என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் சிவன் குட்டி மேலும் தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!