
எங்களுக்கு புழல் சிறையோ, திகார் சிறையோ, அந்தமான் சிறையோ பொருட்டே அல்ல என்றும் தமிழ்நாடு இனி இந்திய அரசை ஆட்டிப்படைக்கப் போகிறது என்றும் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலையான மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.
ஆனால், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுத்தது.
தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த நிலையில், திருமுருகன் காந்தி, டைசன் இளமாறன், அருண் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன் இளமாறன், அருண் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன், தமிழ்நாடு எங்கள் தாய்நாடு. அடக்குமுறை கொண்டோ, குண்டர் சட்டத்தைக் கொண்டே தமிழ்தேச போராளிகளை, பெரியாரின் பிள்ளைகளை, பிரபாகரனை உயர்த்திப் பிடிக்கக்கூடிய எங்களின் போராட்டத்தை வீழ்த்திவிட முடியாது என்றார்.
இந்திய அரசு, தமிழர்கள் மீது ஒரு போரை தொடுத்துள்ளது என்று சொல்லி வருகிறோம். நெடுவாசல், கதிராமங்கலம் உள்பட அனைத்திலுமே தமிழர்கள் மீது, மத்திய அரசின் யுத்தம் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழர்கள் வெல்வார்கள்.
எங்களுக்கு புழல் சிறையோ, திகார் சிறையோ, அந்தமான் சிறையோ பொருட்டே அல்ல. தமிழ் தேசத்தின் உரிமையை நிலைநாட்ட ஒன்று சேருங்கள். லட்சக்கணக்கான இளைஞர்களை நாங்கள் திரட்டுவோம்.
தமிழ்நாடு எங்கள் தாய்நாடு. தமிழ்நாடு இனி இந்திய அரசை ஆட்டிப்படைக்கப் போகிறது. தமிழர்கள் அடிமைப்பட்டு கிடப்பதற்கு ஆடுகளோ மாடுகளோ அட்லல. தமிழர்களின் ஆட்சி இங்குள்ள ஏழை எளியோர்களின் கையில்தான் உள்ளது. ஜனநாயக ரீதியாக எங்கள் போராட்டத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.