
சென்னை, புளியந்தோப்பு, டான் பாஸ்கோ பாலிடெக்னிக் பள்ளி மைதானத்தில், நடைபெற்ற கிறிதுஸ்மஸ் திருவிழா நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சிறுபான்மை மக்களுக்கு எதிராக, இன்று ஒன்றிய பாசிச அரசு, எவ்வளவோ சூழ்ச்சிகளை எல்லாம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சி என்றைக்குமே தமிழ்நாட்டில் வெற்றிபெறாது. அதற்குக் காரணம் நம்முடைய தலைவர் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான்.
அண்ணன் சேகர் பாபு அவர்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சர். ஆனால், அவர் ரம்ஜானையும் சிறப்பாகக் கொண்டாடுவார், கிறிஸ்துமஸையும் சிறப்பாகக் கொண்டாடுவார். கிறிஸ்துமஸ் என்று சொன்னால், வண்ண விளக்குகள், நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் என எங்குப் பார்த்தாலும் வெளிச்சமாக, கொண்டாட்டமாக, மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆட்சிக்கு வந்தவுடன் நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த `விடியல் பயண திட்டம்’. கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளில் 850 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் படிக்க வேண்டும், பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்று முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். பள்ளிக்கூடம் வந்தால் போதாது, அவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நம்மைக்காக்கும் 48, இல்லம் தேடி மருத்துவம் எனப் பல்வேறு திட்டங்கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்.
இப்படிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதனால்தான் இன்று 11.19 சதவிகித வளர்ச்சியுடன் இன்று இந்தியாவிலேயே வளர்ச்சி அடைகின்ற மாநிலத்தில் முதல் இடத்தில் நம்முடைய தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
இப்படிச் சிறுபான்மை மக்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பதற்கு நம்முடைய அரசு தயாராக இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இன்று ஒன்றிய பாசிச அரசு எவ்வளவோ சூழ்ச்சிகள் எல்லாம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சி என்றைக்குமே தமிழ்நாட்டில் வெற்றிபெறாது. அதற்குக் காரணம் நம்முடைய தலைவர் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான்.
இது ஏதோ தேர்தலுக்காக உருவாக்கிய கூட்டணி கிடையாது. நம் கூட்டணி கொள்கைக் கூட்டணி என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அதனால்தான் இன்று அ.தி.மு.க-வின் கூட்டணியை நாம் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூடச் சொல்லமுடியாது. அது ஒரு முதலாளிக்கும், அடிமைக்குமான ஒரு கூட்டணியாக மாறிக்கொண்டிருக்கிறது.
மத நல்லிணக்கத்திற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் எதிரான பாசிஸ்டுகளின், அடிமைகளின் அந்தக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் முறியடித்துக் காட்டுவார்கள். ஏனெனில், திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்றைக்குமே சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு அரணாக நிச்சயமாக இருக்கும்.
தமிழ்நாட்டிற்கு என்று தனி குவாலிட்டி, தனி கேரக்டர் இருக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து கேக் அனுப்புவோம், ரம்ஜான் அன்று பிரியாணி வந்துவிட்டதா என்று பார்ப்போம். எல்லாரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைப்போம். இது தான் தமிழ்நாட்டின் தனித்துவம்” என்றார்.