வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

By Thanalakshmi VFirst Published Sep 24, 2022, 2:59 PM IST
Highlights

தமிழகத்தில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய அவர் ,”தமிழகத்தில் வனப் பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புர பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த  உள்ளூர் மர வகைகள் நடப்படும். 

மேலும் படிக்க:Watch : விருதுநகரில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி ரகங்கள்; விற்பனை துவக்கம்!!

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும் என்று தெரிவித்தார்.

பின்னர் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர் (Digital Wall), எண்ம நூல்கள் (Digital Book) போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டார். 

மேலும் படிக்க:பெட்ரோல் குண்டு வீச்சு.. சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை..

மேலும், பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றிய விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு முதலமைச்சர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 

click me!