கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ள நிலையில் செங்கல்பட்டு ஆட்சியர் உட்பட 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயத்தை தடுக்க முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் எதிரொலியாக, இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தால் கதிகலங்கிப் போயிருக்கும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்பட 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐ.ஏஎஸ் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் கலெக்டராக அன்னீ மேரி ஸ்வர்னாவும், புதுக்கோட்டை கலெக்டராக மெர்சி ரம்யாவும், நாமக்கல் கலெக்டராக உமாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஆட்சியராக முறையே சங்கீதா, ஆஷா அஜித், விஷ்ணு சந்திரன் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர். தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் ஆட்சியராக முறையே ராகுல்நாத், கிருஸ்துராஜ், ராஜகோபால் சுங்கரா ஆகியோர் நியமனம் பெற்றுள்ளனர். பூங்கொடி திண்டுக்கல் ஆட்சியராகவும், ஜானி டாம் வர்கீஸ் நாகை ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சுமார் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விசாரணையில் அவர்கள் அருந்தியது தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் எனப்படும் விஷச்சாராயம் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) செவ்வாய்கிழமை தானாக முன்வந்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சித்துவரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று நேரிலும் சந்தித்துப் பேசியுள்ளார்.
10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி; 5000 அமெரிக்கவாழ் இந்தியர்கள் முன் பேசுகிறார்
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபைஏய் குமார் சிங், வன்னிய பெருமாள் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.