ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், கோவைக்கு இன்று காலை ஒரே விமானத்தில் இருவரும் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ரவிக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு தரப்பு மீது மற்றோரு தரப்பு புகார்களை தெரிவித்து வருகிறது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையென கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது.
இதனையடுத்து அவசர அவசரமாக ஒரு சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் மற்ற மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பேசி இந்த விஷயத்திற்கு தீர்வு கான வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் காரணமாக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்தார். இதற்கு முதலமைச்சர் தரப்பில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் வேறொரு நாளில் சந்திப்பதாக தெரிவித்து இருந்தார்.
ஒரே விமானத்தில் ஆளுநர்- முதலமைச்சர்
இது போன்ற மோதல் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், இன்று காலை கோவை சென்ற விமானத்தில் தமிழக ஆளுநர் ரவியும், முதலமைச்சர் ஸ்டாலினும் பயணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கோவையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8:25 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இதே போல நாமக்கலில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி காலை 8:20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்ற அதே விமானத்தில் கோவை சென்றார். கவர்னர் தனது நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 4:15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவையில் இருந்து புறப்பட்டு மாலை 5:15 மணிக்கு சென்னை வந்து சேர்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பு
நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருந்து வரும் முதலமைச்சரும், கவர்னரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலில் முதலமைச்சர் விமானத்தில் ஏறினார். பின்னர் கவர்னர் விமானத்தில் ஏறினார். இருவருக்கும் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. முதலமைச்சருக்கு 1ஏ இருக்கையும் கவர்னருக்கு 1 எப் இருக்கையும் ஒதுக்கப்பட்டு இருந்தது. விமானத்தில் இருவரும் நலம் விசாரித்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெள்ள பாதிப்பு நிலவரம் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்