தமிழக மின்சார வாரியத்தில் காலியக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பணியாளர்களின் 20 கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும். ஓய்வுக்கால பணபலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும். ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. மின்சார வாரியம் செம்மையாக செயல்பட வேண்டும் என்றால் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
Crime: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை; 65 சவரன் நகைக்காக உயிரை கொன்ற கொள்ளையர்கள்
மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவும் புதிதாக முன்வைக்கப்படுபவை அல்ல. இவை அனைத்தும் பல ஆண்டுகளாக வலியுறுத்தபட்டு வருபவை தான். இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியுள்ளார். அப்போது நியாயமாக தெரிந்த கோரிக்கைகள் இப்போது நியாயமானவையாக தெரியவில்லையா? அவை நியாயமான கோரிக்கைகள் என்று கடந்த காலத்தில் கூறிய முதலமைச்சர், இப்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பது ஏன்? தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுகளின் போது இந்த கோரிக்கைகளை ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ள மறுத்தது ஏன்?
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனம் மின்வாரியம் தான். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் மீது 100 மாதங்களுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதே நிலை மின்சார வாரியத்திற்கும் வந்து விடக்கூடாது. மின்சார வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு நடத்தி, அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.