
திருவாரூர்
கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடந்தாண்டு சம்பா வருமான இழப்பை சந்தித்தது போல், நிகழாண்டும் பாதிப்பின் எல்லையில் நிற்கின்றனர்.
நிகழாண்டு ஒரு போக சம்பா நெல் சாகுபடி காலம் தாழ்ந்த சூழலில் தற்போதாவது உடனடியாக தொடங்க காவிரி நீர் வேண்டும்.
பலர் பருவ மழையை நம்பி விதைகளை தெளித்து வருகின்றனர். எஞ்சிய விவசாயிகள் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். காலம் கடந்தால் நெல் சாகுபடி செய்ய இயலாது.
எனவே, செப்டம்பர் இறுதிக்குள் மேட்டூர் அணையை திறக்க வேண்டும். முறை பாசனம் இல்லாமல் நாள்தோறும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வீதம் 20 நாள்கள் நீர் திறக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை என கைவிரிக்க கூடாது. கர்நாடக அணைகளில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 80 சதவீதத்துக்கும் மேலாக நீர் இருப்பு உள்ளது.
பற்றாக்குறை கால பங்கீட்டின் படியாவது கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும்.
நிபந்தனையின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
கை நடவு, தெளி இயந்திர நடவு என அனைத்து வகை நடவுக்கும், விதை மற்றும் இடுபொருள்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்” என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.