
திருவாரூர்
உரிய காலத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஜாக்ஜியோ கூட்டமைப்பின் சார்பில் அடுத்ததாக போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் பால்பாண்டியன், மாநிலப் பொருளாளர் சாகுல்ஹமீது உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “பழைய ஓய்வூதி்யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியமே இல்லாத அனைத்துத் துறைப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுத் துறையில் தொகுப்பு ஊதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் பெறும் பணியாளர்கள் அனைவருக்கும் நிரந்த காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.
அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்த உரிமையை பறிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனை ஜனநாயக விரோத செயலாக கருதுகிறோம்.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ஆம் தேதியன்று அறிவித்தவாறு ஊதிய மாற்ற அறிக்கையை வருகிற 30-ஆம் தேதிக்குள் பெற்று, சங்கங்களை அழைத்துப் பேசி அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் 24 சங்கங்களை ஒருங்கிணைத்து புதிதாக ஜாக்ஜியோ என்ற ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
உரிய காலத்திற்குள் அரசு கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் 14-ஆம் தேதி திருச்சியில் ஜாக்ஜியோ கூட்டமைப்பின் மாநில பிரதிநிதிகள் மாநாடு நடத்தி, அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்தார்.