
திருநெல்வேலி
தேர்வுக் கட்டண உயர்வை எதிர்த்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவலாளர்கள் தடுத்ததால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தற்போதைய கல்வியாண்டின் பருவமுறை தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி பேட்டையில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டங்களையும் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் முன்பு நேற்று 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டனர்.
இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி, நெல்லை மாவட்டச் செயலாளர் திருமலை நம்பி, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அமர்நாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜகுரு ஆகியோர் தலைமையில் மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் காவலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நெல்லை - தென்காசி பிரதான சாலையில் மாணவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து, விஜயகுமார், நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் நாகசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததால் மாணவர்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தை அந்த தருணத்தில் கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரபாகரன், சிண்டிகேட் உறுப்பினர்கள் மாதவ சோமசுந்தரம், மாதவன், நெல்லை உதவி ஆட்சியர் மைதிலி மற்றும் அதிகாரிகள் குழுவினரும்,
மாணவர் தரப்பில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் உச்சிமாகாளி, நெல்லை மாவட்ட தலைவர் திருமலை நம்பி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் அமர்நாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ராஜகுரு ஆகியோரும் பங்கேற்றனர்.