மூன்றாம் உலகப்போரை தடுக்கும் தொழில், மதிநுட்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது – பாமயன்…

First Published Sep 26, 2017, 7:25 AM IST
Highlights
only taminadu can stop Third World War - pamayan...


திருச்சி

நீருக்காக மூன்றாம் உலகப்போர் உருவாகும் என கூறப்படுகின்றது. அவ்வாறு ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான தொழில், மதிநுட்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது என்று அறிஞர் சான்பரா கார்சன் கூறியதை சூழலியல் அறிஞர் பாமயன் குறிப்பிட்டுக் காட்டினார்.

திருச்சி மாவட்டத்தில் தண்ணீர் அமைப்பின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன் தலைமை தாங்கினார். தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் வரவேற்றார்.  இணைச் செயலர் கி. சதீஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.

கோவையில் நடைபெற்ற சர்வதேச நீர் மேலாண்மை கருத்தரங்கில் முதல் பரிசு பெற்ற உயிர்த்துளி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. படத்தின் இயக்குநர் டென்சிங் மற்றும் குழுவினருக்கும், நெடுஞ்சாலையோரங்களில் அதிக மரங்களை பராமரித்து வரும் கோட்டப்பொறியாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அ.பஷீர் ஆகியோர் சூழலியல் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சூழலியல் அறிஞர் பாமயன் பங்கேற்றார்.

அப்போது அவர், “ஓடுகின்ற நீரைத் அதன் போக்கிலேயே தேக்கி அணை கட்டுகின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருச்சியில் கல்லணை எழுப்பிய கரிகாலனின் நீர்மேலாண்மைக்கு தலை வணங்குகிறேன் என்று ஆங்கிலேய அறிஞர் சர் ஆர்தர் காட்டன் குறிப்பிடுகிறார்.

ஒரு இனத்தின் சிந்தனை மரபை அழித்தாலே அந்த இனத்தை எளிதாக அழித்து விடலாம். அத்தகைய செயல்களைத்தான் இந்தியாவில், பன்னாட்டு வணிக சந்தை நுட்பமும், அரசின் கொள்கைகளும் செயல்படுத்தி வருகின்றன.

பழங்குடி மரபே சூழலோடு இணைந்த மரபு. சூழல் சார்ந்த சிந்தனை மரபை வளர்த்தெடுக்க வேண்டியது நமது காலத்தின் கட்டாயம். சூழலியல் சார்ந்த சிந்தனை மரபில் இருந்து நம் தலைமுறைகள் வெகு தொலைவிற்கு சென்றுவிட்டனர். இது மிகவும் ஆபத்தானது.

வருங்காலத்தில் நீருக்காக 3-ஆம் உலகப்போர் உருவாகும் என கூறப்படுகின்றது. அவ்வாறு ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான தொழில், மதிநுட்பம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே உள்ளது என்று சூழலியல் அறிஞர் சான்பரா கார்சன் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த தொழில்நுட்பம் வேறு ஏதுமில்லை, நமது முன்னோர் நமக்கு ஏற்படுத்தி வைத்துள்ள ஏரி தொழில்நுட்பம் என்கிறார் அவர்.

பேரரசர் ராஜராஜன் காலத்தில் 13 வகையான நீர்மேலாண்மை கட்டுமானங்கள் பயன்பாட்டில் இருந்தன.  தமிழர்களின் பாசன மேலாண்மை உலகமே வியக்கும் வகையிலானது.  ஆனால், நாம் அவற்றை மறந்த காரணத்தால்தான் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை மாற சூழலியலை பாதுகாப்பது அவசியமானது. சூழலியல் சார்ந்த சிந்தனை மரபை வளர்த்தெடுக்க நாம் அனைவரும் இணைந்து முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான் தேசமும், தேச வளமும் காக்கப்படும்” என்று அவர் பேசினார்.

click me!