
திருநெல்வேலி
நடைபாதையில் சமுதாய நலக்கூடம் அமைக்க கூடாது என்று புளியங்குடி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்ட 180 பெண்கள் உள்பட 300 பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி முப்புடாதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவைச் சேர்ந்த மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்த இடத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகமும், ஆதிதிராவிட நலத்துறையும் இணைந்து நிலத்தை கையகப்படுத்தி அதைச் சுற்றி சில மாதங்களுக்கு முன்பு வேலி அமைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பாதையைப் பயன்படுத்திவந்த அப்பகுதி மக்கள் நடைபாதையில் சமுதாய நலக்கூடம் அமைக்கக் கூடாது என்றும், அங்கு நடைபாதை தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மக்கள் தேசம் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஆசைத்தம்பி, சமுதாய நாட்டாண்மை ரமேஷ் ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சென்று புளியங்குடி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களையும் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 180 பெண்கள் உள்பட 300 பேரை அதிரடியாக கைது செய்தனர்.