இனி சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சனிக்கிழமைகளில் மட்டும் பத்திரம் பதிவு செய்ய ரூ 1000 கட்டணமாக வசூலிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வணிகவரித் துறையில் கடந்த ஆண்டை விட ரூ.8760.83 கோடி கூடுதலாக, அதாவது ரூபாய் 1,04,970.06 கோடி வருவாயாக பெறப்பட்டுள்ளது என்று கூறினார். வணிக வரித்துறையில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மறுசீரமைப்பு, தீவிர கண்காணிப்பு மற்றும் வணிகர்களுடனான கனிவான அணுகுமுறையின் விளைவாகவே இது சாத்தியமானது.
பதிவுத் துறையிலும் அரசு வருவாய் முந்தைய ஆண்டைவிட ரூபாய் 3270.57 கோடி அதிகரித்து, 2021-22ம் ஆண்டு ரூபாய் 13,913.65 கோடியாக உயர்ந்துள்ளது. பதிவுத்தவறுகளும், அவணப்பதிவுகளும் அதிகமாக இருந்த பதிவுத்துறையில் வருவாயைப் பெருக்குவது சாத்தியமா என எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், திமுக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு அறிவு சார்ந்த செயல் திட்டங்களின் காரணமாக பதிவுத்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டார். அதன்படி பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாள் அன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளிலும் பதிவுப்பணி மேற்கொள்ளப்படும் இதற்கு கட்டணமாக ஆயிரம் வசூலிக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.