
சாலையோர கிணறு ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு : சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளாமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரங்களில் கவிழும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதிலும் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் சாலையோரங்களில் உள்ள பழைய கிணறுகளில் விழுந்து தண்ணீரில் மூழ்கி வாகனத்தில் பயணம் செய்தவர்கள் துடி துடித்து உயரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இதே போன்ற சம்பவம் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே கண்ணீர் வரவைத்துள்ளது. திருமண நிகழ்விற்காக ஆம்னி வேனில் சென்ற 8 பேர்சென்ற நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதில் 3 பேர் தப்பித்த நிலையில், குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து தமிழக அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது. சாலை ஓரங்களில் உள்ள கிணறுகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள சாலைகளை ஓரத்தில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனே இதனை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆய்வுக்கு பின் ஆபத்தான வகையில் உள்ள கிணறுகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சாலையோரங்களில் கிணறுகள் உள்ளதை சுட்டுக்காட்டும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் பள்ளம் உள்ளது. கிணறு உள்ளிட்ட என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆய்வு செய்த பிறகு, தற்காலிகமாக இது போன்ற கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் அந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
இதன்பிறகு, நிரந்தரமாக கிணறுகளை மூடும் வகையில் அவற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.