
மருத்துவ கழிவுகள்- தமிழக அரசு அதிரடி
உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை - சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அந்த வகையில், உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பான அடிக்கடி புகார்கள் பெறப்படுகின்றன.
தடுப்பு காவல் சிறை
கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்புக்காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்படும் என சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவின் படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அணடை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்.
கேரள கழிவுகள் தமிழக கடலில் கொட்டப்படுகிறதா.? உண்மை என்ன.? TN Fact check விளக்கம்
துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம்
இதே போல தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் பல்கலைக்கழக சட்டங்கள் மூலம் 18 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம்
இதே போல மற்றொரு சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.