விலைவாசி உயர்வால் ஏற்கனவே மக்கள் நெருக்கடியில் வாழ்கின்றனர் இதில் மின்கட்டண உயர்வுமா? சீமான் கண்டனம்

By Velmurugan s  |  First Published Dec 16, 2023, 7:25 PM IST

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வெளியிட்டுள்ள பதிவில், “வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் அலகு ஒன்றுக்கு 21 பைசா வரை உயர்த்தி தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடுமையான மின்கட்டண உயர்வு மூலம் தமிழ்நாட்டிலுள்ள 10 இலட்சம் தொழில் முனைவோர்கள் மற்றும் அதில் பணியாற்றும் 1 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை திமுக அரசு இருளாக்கியுள்ளது பெருங்கொடுமையாகும்.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொழில் நிறுவனங்களும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் குடிமக்களும் பகலில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒருவித கட்டணமும், இரவில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 25% வரை அதிக கட்டணமும் செலுத்த வேண்டுமென இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு ‘மின்நுகர்வோர் விதிமுறைகளில்’ புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து வரி என்ற பெயரில் மக்களை வாட்டிவதைக்க முடிவெடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது எதேச்சதிகாரப்போக்காகும்.

Tap to resize

Latest Videos

2011ல் எம்எல்ஏக்கள் செய்த துரோகம் தான் கேப்டனின் உடல்நிலை மோசமாவதற்கு காரணம் - பிரேமலதா ஆதங்கம்

ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு் வாழ்வா? சாவா? நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், மக்களை மேலும் மேலும் கசக்கிப்பிழியும் விதமாக தமிழ்நாடு அரசும், இந்திய ஒன்றிய அரசும் மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்துவது என்பது கொடுங்கோன்மையாகும்.

குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகப்படுத்தி வழங்க வேண்டியது ஆளும் அரசுகளின் அடிப்படை கடமையாகும். அதனைவிடுத்து, வளர்ச்சி என்ற பெயரில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களை சிவப்புக் கம்பளம் விரித்து நாட்டிற்குள் அனுமதித்துவிட்டு அவற்றின் மின்தேவையை நிறைவு செய்வதற்காக, குடிமக்களும் சிறு, குறு நிறுவனங்களும. தங்களுடைய மின்பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள, நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையை நடைமுறைப்படுத்தத் துடிப்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஏற்கெனவே, மோடி அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் உள்நாட்டு சிறு-குறு தொழில்முனைவோர்கள் பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில், நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையானது அத்தொழில்களை அடியோடு அழித்தொழிக்கவே வழிவகுக்கும். எனவே, நேரத்திற்கேற்ப மின்கட்டண நிர்ணயம் என்பது தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் இலாபமீட்ட மட்டுமே உதவுமேயன்றி, நாட்டு மக்களுக்கு துளியளவும் பயன்படபோவதில்லை. ஆனால், தமிழ்நாடு மின்வாரியம், நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையால் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கமளித்து, பாஜகவின் சதித்திட்டத்திற்கு திமுக அரசும் துணைபோவது தமிழ்நாடு தொழில் முனைவோருக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

நீலகிரியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிலச்சரிவுக்கு தீர்வு; அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்

ஆகவே, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசும், நேரத்திற்கேற்ப மின்கட்டண முறையினை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வினைத் திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு முன்னெடுக்கும் மனித சங்கிலி உள்ளிட்ட அனைத்து அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, நியாயமான கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!