மிக்ஜாம் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் நிதியளித்துள்ளனர்
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
undefined
இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(G)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன்கீழ் விலக்களிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று அரசியல்வாதிகள், தொழில் நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியை உதவியாக அளித்து வருகின்றனர். அந்த வகையில், மிக்ஜாம் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி.க்கள் நிதியளித்துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்த திமுக எம்.பி.க்கள், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 30 திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையை வழங்கினர்.