பொங்கல் கரும்பு.! விவசாயிகளிடம் எவ்வளவு ரூபாய்க்கு, எப்படி வாங்க வேண்டும்- வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

By Ajmal KhanFirst Published Dec 30, 2022, 10:42 AM IST
Highlights

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புக்கான அதிகபட்ச கொள்முதல் விலையை ரூ.33 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கரும்பு கொள்முதல் செய்வதற்காக ரூ.72.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக 2 ஆயிரத்து 356 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள்,  கரும்பு சாகுபடியாளர்கள் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதிமுக சார்பாக போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சாதியின் பெயரால் தீண்டாமைக் கொடுமைகள்..! 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் தோல்வி- சீமான் ஆவேசம்

கரும்பு விலை எவ்வளவு.?

கரும்பு கொள்முதல் செய்வதற்காக ரூ.72.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட அளவில் விவசாயிகளிடம் இருந்து கரும்பை நேரடியாக கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவரை தலைமையாக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. கரும்பு வெட்டு கூலி, ஏற்றி இறக்கும் கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றுடன் ஒரு கரும்புக்கு அதிகபட்சமாக ரூ.33 என கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதலில் எந்த தவறும் நிகழாத வகையில் மாவட்ட ஆட்சியர்  கண்காணிக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்யவும், சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழகம் முழுவதும் 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

6 அடியாக இருக்க வேண்டும்

ஒரு கிராமத்தில் ஓரே விவசாயிடம் இருந்து ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்யக்கூடாது. இடைத்தரகர்களிடம் இருந்து கரும்பு வாங்கக்கூடாது. கொள்முதல் செய்யப்படும் கரும்பு 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரியை விட கூடுதல் தடிமனாக இருக்க வேண்டும். நோய் தாக்கிய கரும்பாக இருக்கக்கூடாது. கரும்பின் நுணியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழுமையாக வழங்க வேண்டும்.ஒருநாளில் எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு கரும்பை படிப்படியாக கொள்முதல் செய்ய வேண்டும்  என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. 

click me!