
தூத்துக்குடி
தமிழக அரசு நீட், நெடுவாசல் போன்ற மக்கள் பிரச்சனை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் சாடினார்.
தூத்துக்குடி மாவட்டம் சில்வர்புரத்தில் திமுக சார்பில் தூர்வாரப்படும் மாடன்குளத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார்.
பின்னர், தனியார் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்மையில் மறைந்த திமுக தெற்கு மாவட்டச் செயலர் என்.பெரியசாமியின் உருவப்படத்தை ஸ்டாலின் திறந்து வைத்து மெளன அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர், மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்:
அதில், “தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை அரசு உதவியில்லாமல் திமுகவினர் பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியில் நீட் தேர்வாக இருந்தாலும் சரி, விவசாயிகள் பிரச்சனை, நெடுவாசல் பிரச்சனை என மக்கள் பிரச்சனை என எதுவாக இருந்தாலும் சரி, தமிழக அரசு இதை எதிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.
தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றபோதிலும் தமிழக அரசு அதைப் பற்றி கவலைப்படாமல் உள்ளது.
நீதிமன்றமே விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவில்லை.ஆனால், 100 நாள் ஆட்சியில் சாதனை என விளம்பரம் செய்து வருகின்றனர்.
மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் எந்தத் துறையும் செயல்படவில்லை” என்று அவர் குற்றம் சாட்டினார்.